C. N. Annadurai
'பொது ஜனம்! மக்களின் தீர்ப்பு! -அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின் மனம், ஒரு காலிப்பாண்டம்! யார் எதைப் போட்டாலும், ஏற்றுக் கொள்ளும்! அதிலும், உனக்கு வேடிக்கை தெரியாது -அந்தப் பாண்டமும் ஓட்டை! போட்ட பண்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே சிதறியே போய்விடும். நீ, ஏதோ புத்தகங்களிலே படித்துவிட்டுப் பேசுகிறாய், பொதுஜன வாக்கு -சத்திய தேவதையின் தீர்ப்பு என்றெல்லாம். மெழுகுப் பொம்மைக்காரர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றபடி, மெழுகைக் கொண்டு பலப்பல செய்கிறார்களே, பார்த்திருக்கிறாயல்லவா? யானையும் செய்வார்கள் பூனையும் செய்வார்கள் -நிஜம் போலவே இருக்கும் -மெழுகு கொண்டு! அதுபோல ’சாலக்குக்காரர்கள்’ மக்கள் மனத்தைக் கொண்டு பல உருவங்களைச் செய்கிறார்கள் -நீ, ஏதோ மக்கள் தீர்ப்பு மகத்தான தீர்ப்பு என்று பாடம் படிக்கிறாய்.''தவறு! பெருந்தவறு! அநீதியுங்கூட! பொதுமக்களை அவ்வளவு துச்சமாக எண்ணாதே. சகல சக்தியும், கிளம்பும் ஊற்று. ஜனசக்தி! அவர்கள், குடும்பப் பாரத்தால் வளைந்து போகக்கூடும் -அதனால் அவர்களுக்கு, முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து முடிவு கட்ட நேரம் இல்லை -அதனாலேயே, அவர்கள் ஏதுமறியாதவர்கள் -எதையும் சிந்தித்து முடிவு செய்யும் ஆற்றலற்றவர்கள் என்று கூறுவது தவறு. ஜனநாயகக் கோட்பாட்டுக்கே விரோதம். மனித சக்தி மகத்தானது! மக்கள் தீர்ப்பு முடிவானது-அதுவே சிலாக்கியமானதுங்கூட!'மக்கள், எத்தனை முறை, தாங்களே செய்த தீர்ப்பைத் தாங்களே மாற்றிக்கொண்டனர் தெரியுமா? ஜூலியஸ் சீசர்,