C. N. Annadurai
'ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள். மகா உத்தமர். அவருடைய திவ்ய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவர், ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது! பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை என்று கூறலாம்.உலகமே தலைக்கீழாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்தம்னு பேசிண்டிருக்கு, ஒரு ராட்சசக் கூட்டம், அப்படிப்பட்டவாளெல்லாம், நம்ம செட்டியாரின் சர்வபரித் தியாகத்தைக் கேட்டாளானா, நடுநடுங்கிப் போவாள். லோகத்திலே, எல்லாவிதமான பாசத்தையும் ஒருவர் அடக்கலாம். ஆனா, இந்தப் புத்ர பாசம் இருக்கே அதனைச் சாமான்யமா அடக்க முடியாது. சக்ரவர்த்தி தசரதனாலேகூடப் புத்ரசோகத்தைத் தாங்க முடியவில்லை என்பது லோகப் பிரசித்தமான விஷயம். நம்ம செட்டியார், தமது குமாரன், ஒரே மகன், ஆச்சார அனுஷ்டானாதிகளுக்கு விரோதமான காரியம் செய்யத் துணிந்தபோது எவ்வளவோ கீதோபதேசம் செய்து பார்த்தும், அவன் பிடிவாதமாக இருக்கக் கண்டு, என்ன செய்தார்? மகன் என்ற பாசத்தைக் கூட உதறித் தள்ளிவிட்டார். அவ்விதமான தவச்சிரேஷ்டராக்கும், நமது செட்டியார்வாள். தமது ஒரே புத்திரன் ஏதோ கால வித்தியாசத்தாலும், கெட்டவா சகவாசத்தினாலும், பொதுவாகவே லோகத்தில் இப்போது தலைவிரித்து ஆடுகிற அதர்மக் கோட்பாடுகளை நம்பியதால், உத்தமமான வைசிய பரம்பரையிலே உதித்ததையும் மறந்து, கேவலமான காமாதி பாசத்திற்குப் பலியாகி, குல தர்மத்தைக் கைவிட்டு, வேறு குல ஸ்திரியை மணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் செய்தது கண்டு,