Annadurai
தமிழ்நாட்டில் இந்தி கட்டாய பாடமாக இருக்க வேண்டுமென்று கருதுபவர்கள் தங்களுடைய தவறை உணரும்படி செய்வதும் இன்றியமையாததாகும்.வட இந்தியருள்ளும் ஒரு சிறு பகுதியினரால் மட்டும் பலப்பல மாறுதல்களுடன் பேசப்படுவதும், இற்றைக்கு 500ஆண்டுகளுக்குள்ளாகவே சமஸ்கிருதம், உருது முதலான மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களையும், சொற்களையும் கொண்டு உண்டாக்கப்பட்டதும், பழைய அறிவு நூற்செல்வம் இல்லாததுமான ஒரு கலப்புச் சிதைவு மொழியாகிய இந்தி மொழியை இவ் இந்தியா முழுவதுக்கும் பொதுமொழியாக வைத்துவிடலாம் என்பது ஒரு சிலரின் நோக்கம். இவ்வாறான ஏழை மொழியாகிய ஒரு புது மொழியை இந்தியாவிலுள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் கட்டாய பாடமாக்கி அதனை இந்தியாவிற்கே ஒரு பொது மொழியாக்கிவிடலாம் என்று நினைந்து, அத் துறையில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் சில தலைவர்கள் நாம் கீழே தரும் வினாக்களுக்குத் தக்க சான்றுகளுடன் விடைகள் அளித்த பின்பே அவர்கள் அதனை நம் மக்கட்குக் கட்டாயப்படுத்தும் பெரு முயற்சியில் ஈடுபட வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கின்றோம்:- தமிழ்நாடல்லாத வேறெந்த நாட்டிலாவது அவர்களின் தாய்மொழியை நீக்கி வேறொரு அயல் மொழியைக் கட்டாய பாடமாக வைத்துக் கற்பிக்கப்படுகின்றதா? அங்ஙனமாயின் எந்த நாட்டில், எம்மொழி என்பதைத் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டுக!இந்தி மொழியை இந்தியா முழுவதுக்கும் பொது மொழியாக்குவதினின்றும் மக்களிடையேயுள்ள பிளவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாக்கும் என்னும் கூற்றுக்கு யாதாயினும் சான்று காட்டி அதனை மெய்ப்பிக்க முடியுமா?