Rajam Krishnan
நாவல் போட்டி நடத்துவதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. மற்றொரு விதத்தில் கவலை உண்டாகிறது. எழுதும் ஆற்றலுடையவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அவர்களுடைய படைப்புத் திறமையைத் தூண்டி விடுகிறோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் போட்டியில் கலந்து கொள்ள, முன்பே பல கதைகளையும் நாவல்களையும் எழுதிய எழுத்தாளர்கள் முன் வருவதில்லை. புதிய எழுத்தாளர்களே தங்கள் நாவல்களை அனுப்புகிறார்கள். அப்போது ’இத்தனை நாவல்களிலும் பரிசுக்குத் தகுதியானதாக ஒன்று கிடைக்க வேண்டுமே!’ என்ற கவலை உண்டாகி விடுகிறது. இதுவரை குறையின்றி நாராயணசாமி ஐயர் பரிசைத் தமிழ் அன்பர்கள் பாராட்டும் வகையில் வழங்கி வரும்படி நேர்ந்திருக்கிறது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.’பெண் குரல்’ என்ற இந்த நாவல் 1953-ஆம் வருஷப் போட்டியில் பரிசு பெற்றது. கலைமகளில் தொடர்ச்சியாக வந்தது.